Monday, January 10, 2011

சென்னை புத்தகக் காட்சி - வெற்றிகரமான இரண்டாவது வாரம்!

34வது புத்தகக் காட்சியை கலைஞர் திறந்துவைக்கவில்லை. பலபேருக்கு அதில் மகிழ்ச்சி. புத்தகக் காட்சிக்கு அவரால் கிடைக்க வேண்டிய விளம்பரம் கிடைக்காததில் எனக்கு நிறைய வருத்தங்கள்.

கடந்தமுறை சென்னை முழுக்க நிறைய இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இம்முறை அப்படி இல்லை. சென்னை சங்கமத்துக்கு செய்திருக்கும் விளம்பரங்கள் அபாரம். பபாசி கவனிக்க.

வழக்கமாக நடைபாதை மோசமாக இருக்கும். இம்முறை நன்றாக இருக்கிறது. அறுகோணக் கற்களால் ஆன நடைபாதை. அதிலும் மண், தூசு படிந்திருப்பதாக பத்ரி குறைபட்டுக்கொண்டார். என்னைக் கேட்டால் இதுவே அதிகம்.

வழிநெடுக நிறைய ஃப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, குமுதம். நடிகை ஜெனிலியாவுக்கு குமுதம் தலையங்கம் பிடிக்கும் என்று எழுதிவைத்திருந்தார்கள். சிலிர்ப்பாக இருந்தது. என். சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் என்கிற Column ரீமா சென்னுக்குப் பிடிக்குமாம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

புத்தக அரங்குக்கு நுழைவதற்கு முன்னரே பாப்கார்ன், பழத்துண்டுகள், கடலை விற்பவர்கள் வலைவரித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் சிக்கிவிடுகிறார்கள். ஆகவே, பெற்றோர்களும். வயிற்றுக்கு மிஞ்சியதுதான் புத்தகத்துக்கு. வாழ்க வியாபாரிகள்!

ஏர்டெல் சூப்பர்சிங்கர் என்று சேர்த்துச்சேர்த்துச் சொல்வது போல புதிய தலைமுறை அரங்கு என்று மூச்சுக்கு முந்நூறு தடவை மைக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தமுறை கிழக்கு அரங்கு என்று அறிவிக்கக்க்க்க்க்க்கூடுடுடும்ம்!

விலைவாசி உயர்வு டிக்கெட் கட்டணத்தைப் பாதிக்கவில்லை. அதே ஐந்து ரூபாய்!

அரங்கில் இருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். விவேகானந்தர் பாதை. ஒளவையார் பாதை. ரபீந்திரநாத் தாகூர் பாதை. ஷெல்லி பாதை என்று ஏராளமான பாதைகள். கடைகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பெயர்கள் பயன்படுகின்றன. அதற்கு பாதையின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம்.

முக்தா சீனிவாசனைத்தான் முதலில் பார்த்தேன். அவருடைய அனுபவங்கள் சிலவற்றைப் புத்தகமாக்கியிருந்தார். தன் வரலாறு உள்பட. விலை மிகவும் அதிகம். அருகில் இருந்த பெண் வாசகர் ஒருவர் விலை பற்றிக் கேட்டார். சரி, நீயே ஒரு விலை சொல்லி எடுத்துக்கோ என்றார். சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டேன்.

தினத்தந்தியில் விற்பனை படுவேகம். அநேகமாக இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் 1 செல்லர் வரலாற்றுச் சுவடுகளாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும். திரளும் கூட்டத்தின் வேகம் அப்படி இருக்கிறது!

வரிசைக்கிரமமாக எல்லாக் கடைகளையும் பார்க்கவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் முடியவில்லை. விடியல், அலைகள், ஆழி, பாரதி புத்தகாலயம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், வே. ஆனைமுத்து அவர்களுடைய ஸ்டால் என்று சில குறிப்பிட்ட ஸ்டால்களையும் அவற்றின் பாதை மற்றும் எண்ணைக் குறித்துக்கொண்டு நேராக கிழக்கு ஸ்டால் பக்கம் வந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத்தொடங்கி 2010ல் வெளியாகும் என (என்னால்) எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்கள் மூன்று. திராவிட இயக்க வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2. மூன்றாவது புத்தகம், சஞ்சய் காந்தி. முதல் நாளில் தி.இ.வ. இரண்டாவது பாகம் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. இரண்டு நாள் கழித்துதான் முதல் பாகம் விற்பனைக்கு வந்தது. வாசகர்கள் மத்தியில் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு. இரண்டு பாகங்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் விற்கின்றன. ஒரே பாகமாகப் போட்டிருக்கலாமே என்று சில வாசகர்கள் கேட்டார்கள். தயாராகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னேன். பத்ரி மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக.

இங்கே தமிழ்நாட்டில் புயலையோ, புழுதியையோ கிளப்பியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வளையவருகிறார் ராகுல் காந்தி. இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பைக்கொண்டு அரசியல் மாற்றம் காண விரும்பும் அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதா என்பது தெரியாது. ஆனாலும் இதே இளைஞர் காங்கிரஸை வைத்து ஒருகாலத்தில் சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டங்கள் பற்றிய பல செய்திகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. அடுத்து, எமர்ஜென்ஸியின்போது அவர் செய்த அத்துமீறல் காரியங்களில் இருந்து காங்கிரஸ் தன்னை விலக்கிவைத்துக்கொள்ள எத்தனிக்கும் செய்திகள் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. ஆக, இந்த இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக்கொண்டு சஞ்சய் காந்தியின் அரசியல் வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறேன். முடிந்தால் வாங்கி, முடியாவிட்டாலும் வாசித்துப் பாருங்கள்! இந்திய வரலாற்றில் சில அதிர்ச்சியூட்டும் பக்கங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்!

என்னுடைய நண்பர்கள் எழுதியுள்ள பல புத்தகங்கள் நல்ல அளவில் விற்பனையாவதை நேரில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். முக்கியமாக, ச.ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன். மூன்றிலக்க எண்ணிக்கையை அநாயாசமாகத் தொடுகிறார் ராஜராஜ சோழன். அநேகமாக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் ஒன் பட்டம் ராஜராஜ சோழனுக்குத்தான் கிடைக்கும் என்றே தெரிகிறது. இல்லாவிட்டாலும் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் கண்ணன். நியாயஸ்தர்.

மருதனுக்கும் முதல் உலகப்போருக்கும் நிறைய ரசிகர்கள் மற்றும் வாசகர்கள். ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் என்று மனிதர் செம பிஸி. இரண்டாம் உலகப்போரும் சக்கை போட்டு போட்டுக்கொண்டிருக்கிறது.

கல்யாணம் முடித்த கையோடு கிளியோபாட்ராவையும் எழுதிமுடித்த முகிலுக்கு இந்த ஆண்டு கூடுதல் வரவேற்பு. அவருடைய பிரும்மாண்டப் படைப்பான அகம் புறம் அந்தப்புரம் தினம் தினம் மிரட்டிக்கொண்டிருக்கிறது. முகிலின் வயது அறுபது என்று நினைத்து வரும் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. இன்ப அதிர்ச்சி.

கிழக்கு வாசகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு இணங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வந்துவிட்டார். எழுதியவர் பாலு சத்யா. அவரைப் போலவே அவர் எழுதிய புத்தகமும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சாதித்துக்கொண்டிருக்கிறது.

தேவர் புத்தகம் போல கிழக்கு வாசகர்களின் விருப்பமாக தமிழ்நாடு சுற்றுலா கையேடு என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. எழுதியவர் தமிழ் சுஜாதா. ப்ராடிஜி பதிப்பகத்தின் ஆசிரியர். தமிழ்பேப்பர் டாட் நெட் இணைய இதழில் பெண் மனம் என்ற பத்தியை எழுதுபவர். தீவிர சுற்றுலாப்பிரியர். சுற்றுலா ஆசை இருக்கும் அத்தனைபேரையும் கவர்ந்துள்ளது இந்தப்புத்தகம்.

கிழக்கின் நிரந்தர சூப்பர்ஸ்டாரான பா. ராகவன் இம்முறை இரட்டை கோபுரத் தாக்குதல்.. காஷ்மீர் : அரசியல் ஆயுத வரலாறு. தொடர்ந்து டாப் 5 பட்டியில் இருக்கிறது. அடுத்தது, ஆர்.எஸ்.எஸ். டாப் டென் பட்டியலில் நானும் எனது நண்பர்களும் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. டாலர் தேசம், மாயவலை, நிலமெல்லாம் ரத்தம் எல்லாம் வழக்கம்போல கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு. இவைதவிர, ஜெயமோகனின் உலோகம், கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு. பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை.. ஐ மீன்.. பத்ரி எழுதிய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை புத்தகத்தைப் பார்த்த அத்தனை வாசகர்களுமே ஆச்சரியப்பட்டனர். அதற்குள்ளேவா? இத்தனூண்டா? என்று நிறைய காரணங்கள்.

கிழக்கில் எங்களுடைய ஜூனியரான சுஜாதாவுக்கு வாசகர்கள் அபார வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். பிரிவோம் சந்திப்போம், மீண்டும் ஜீனோ என்று சுஜாதா ரசிகர்களுக்கு கிழக்கு ஸ்டால் ஃபுல் மீல்ஸ் வழங்குகிறது.

கிழக்கு தவிர்த்து மற்ற ஸ்டால்களுக்கு வரும் புதன்கிழமை முதல் செல்ல இருக்கிறேன். நிறைய புத்தகங்களைக் குறித்துவைத்திருக்கிறேன். வாங்கவேண்டும்.

சேல்ஸ் நண்பர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். பிள்ளையார் சுழியாக பிரசன்னா. ஒரே ஆள்.. ஜெயமோகனுக்கு கொ.ப.செவாகவும் சுஜாதாவுக்கு செயலாளராகவும் மாறிமாறி தூள்கிளப்புகிறார். அவ்வப்போது திராவிட இயக்க வரலாறின் ஒரு பாகத்தை வாங்குபவர்களிடம் இன்னொரு பாகத்தையும் வாங்கச்சொல்கிறார். பார்க்க சந்தோஷமாக இருந்தது.

விஜயகுமார், பாண்டியன், பழனி என்ற மும்மூர்த்திகளால் எப்படித்தான் வாசகர்களின் புயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடிகிறதோ! எத்தனை விதமான வாடிக்கையாளர்கள்! எல்லோரையும் கூலாக சமாளிக்கிறார்கள்! கல்லா கச்சிதமாக நிறைகிறது!

திங்கள் மாலை புத்தகக் காட்சியை வலம்வந்துகொண்டிருக்கும்போது ஒரு நல்ல செய்தி. கிழக்கி வெளியீடுகளான காப்புரிமை மற்றும் சந்திரயான் புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்துள்ளதாக நண்பர் பாலு சத்யா சொன்னார். காப்புரிமை புத்தகத்தை எழுதிய ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கு உடனடியாக விஷயத்தைச் சொல்லி வாழ்த்து சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். எதிரே பத்ரி. ஆட்சி மாறாமல் இருந்தால் அநேகமாக அடுத்த ஆண்டு விருது ஸ்பெக்ட்ரம் பத்ரிக்குத்தான்!

3 comments:

goma said...

நானும் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்....நீங்கள் சொன்னபடி பழத்துண்டுகளும் பாப்கார்னும் வரவேற்கின்றன.
கார் பார்க்கிங் 20 ரூபாய் அதிகம் .
சமையல் ஜோதிடம் குழந்தைகள் புத்தகங்கள் கொஞ்சம் அதிகமாகவே விற்பனை ஆவது போல் இருக்கின்றன.

csmathi said...

very nice

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Very good to see the infrmn. I too went there.