உண்மையில் இந்த ஆண்டு எனக்கு மறக்கமுடியாத புத்தகக் காட்சியாக அமைந்துவிட்டது. காரணங்கள் ஆறு.
முதல் காரணம்: அம்பேத்கர்.

இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் வரிசையில் பெரியாரும் அம்பேத்கரும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். இருவரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறை ஏற்கெனவே எழுதியிருந்தேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் வெளியாகி, வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோன்று, இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் வகையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறை எழுதியிருந்தேன். தற்போது புத்தகம் வெளியாகி, விற்பனையில் இருக்கிறது. என் மனத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த புத்தகங்களில் இது முக்கியமானது.
இரண்டாவது காரணம்: எம்.ஜி.ஆர்
தமிழ்நாட்டின் அதிமுக்கிய ஆளுமைகளுள் ஒருவர் எம்.ஜி.ஆர். அவருடைய வாழ்க்கை வரலாறைப் புத்தகமாகப் பதிவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது அந்தப் புத்தகம் வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை என்ற பெயரில் வெளியாகி, நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது (தகவல் உபயம் : எங்கள் நிறுவனத்தின் இயக்குனர் சத்யா).

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகத் தகவல் சேகரிப்பில் இறங்கியிருந்தேன். கூடவே, பெரியாரின் வாழ்க்கை வரலாறு, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வரலாறு என்று பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிவிட்டேன். தமிழக அரசியல் தொடர்பான பல புத்தகங்களை எடிட் செய்து முடித்திருந்தேன்.
இடைப்பட்ட காலங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்குள் நிரம்பிக் கொண்டிருந்தார். பழைய பேசும்படங்களாக. குண்டூசிகளாக. பொம்மைகளாக. ஆனந்த விகடன்களாக. ஒவ்வொன்றையும் படித்து, குறிப்பெடுத்து, மேல் விவரங்கள் சேகரித்து, ஆதாரங்களைத் திரட்டி, ஆவணங்களைத் தேடி எடுத்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தபிறகுதான் எழுதத் தொடங்கினேன். கூடுதல் உழைப்பைக் கோரிய புத்தகம் எம்.ஜி.ஆர். அந்த உழைப்புக்குத் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதோடு, புத்தகத்துக்குக் கவர்ச்சிகரமான டைட்டிலை (வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை) வழங்கிய என்னுடைய முதன்மை ஆசிரியர் பா. ராகவனுக்கு நன்றிகள் பல.
மூன்றாவது காரணம், பா. தீனதயாளன்
என்னுடைய நண்பர் பா. தீனதயாளன் எழுதிய கமலஹாசன் புத்தகம் அற்புதமாக வந்துள்ளது. விற்பனை ரீதியாகவும் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. உழைக்கப் பிறந்த மனிதர் பா. தீனதயாளன். முன்னதாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்த மூன்று புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். இருப்பினும் அவர் எழுதிய புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ’சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை’ என்ற புத்தகம். புத்தகம் என்றால் அந்தப் புத்தகத்துக்காக அவர் செலுத்திய உழைப்பு.
பிரபலமான மனிதரைப் பற்றிய விவரங்கள் என்றால் அவருக்குத் தெரிந்த அத்தனைபேருமே எளிதில் சொல்வார்கள். தகவல்கள் வேகமாகக் கிடைக்கும். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையைப் பற்றிக் கலைத்துறையில் இருக்கும் மனிதர்களைச் சந்தித்து, விவரங்கள் கேட்டு, அவற்றைச் சரிபார்த்து, புத்தகமாக எழுதுவது சாத்தியமில்லாத விஷயம். சிலுக்கு குறித்த புத்தகத்தை எழுதுவதற்காக நாசர், சிவகுமார், முக்தா சீனிவாசன் போன்ற கலையுலக பிரபலங்களிடம் அவர் பட்ட சிரமங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் ஒரு முழுமையான புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த உழைப்பு, அந்த சகிப்புத்தன்மை, அந்தப் போர்க்குணம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

கமலஹாசன் என்ற ரகசியங்கள் நிறைந்த மனிதரைப் பற்றிய முழுமையான வரலாறை பா. தீனதயாளன் கொண்டுவந்திருக்கிறார். ஏறக்குறைய கமலே மறந்துபோன அவருடைய வாழ்க்கைப் பக்கங்களை எல்லாம் பா. தீனதயாளன் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். தமிழ் சினிமாவைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கும் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் காட்சியில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
நான்காவது காரணம் : முகில்
கிழக்கு அரங்கில் வாசகர்களுக்கு மத்தியில் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று பேர் ஒரு புத்தகத்தைப் பற்றி அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். மூவரும் நண்பர்கள். மூவருக்கும் இடையே கடுமையான விவாதம். ஒருவருக்குப் புத்தகம் முக்கியம். இன்னொருவருக்கு டிஸ்கவுண்ட் முக்கியம். இன்னொருவருக்கு அவர்கள் இருவரும் முக்கியம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக விவாதம் தொடர்ந்தது. ஆம். அவர்களுக்குப் பின்னாலேயே நின்று கொண்டிராமல் அரங்கை விட்டு வெளியேறி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து கிழக்கு அரங்குக்கு வந்தபோது அதே மூன்று இளைஞர்கள். அதே விவாதம்.
அவர்களை நெருங்கினேன். அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் விவாதித்த புத்தகம் பற்றிக் கேட்டேன். மூவருக்குமே நல்ல வாசிப்பு ஆர்வம். குறிப்பாக, வரலாறு தெரிந்துகொள்வதில். ஆனாலும் டிஸ்கவுண்ட் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். உடனே நான் அவர்களை கேஷ் கவுண்ட்டருக்கு அழைத்துச் சென்று பிரசன்னாவிடம் பேசினேன். இருபது பர்சண்ட் கிடைத்தது. அந்த மூவர் முகத்திலும் அத்தனை சந்தோஷம். நூலாசிரியரிடம் கையெழுத்துவாங்க விரும்பினார்கள். அழைத்துவந்தேன். மூவரும் சந்தோஷமாகப் புறப்பட்டனர். அந்தப் புத்தகம்: முகலாயர்கள். நூலாசிரியர்: முகில்.

கல்கி பத்திரிகையில் இருந்து என்னுடன் இருக்கிறார் முகில். அல்லது முகிலுடன் நான். மேலே சொன்ன நண்பர் பா. தீனதயாளன் திருவாளர் உழைப்பு என்றால் முகில் திருவாளர் தேடல். தனக்குத் தேவையான விஷயத்தைத் தோண்டித் துருவி எடுக்க சலியாதவர். பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீபத்திய உதாரணம், இந்திய சமஸ்தான இணைப்பு பற்றி வி.பி. மேனன் எழுதிய, ஏறக்குறைய புதைபொருளாகிவிட்ட புத்தகத்தைப் பெறுவதற்காக அவர் செய்த முயற்சிகள் வியப்பை ஏற்படுத்தியவை.

முகில் எழுதிய முகலாயர்கள் புத்தகம் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் விற்பனையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. தவிரவும், அவர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் எழுதிய ‘அகம் புறம் அந்தப்புரம்’ தொடரின் நூல் வடிவம் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. மெகா சைஸ் புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் வரலாறு என்ற தலைப்பில் வந்துள்ள இந்தப் புத்தகம் கிழக்கில் இருந்து வெளியாகும் இரண்டாவது பிரம்மாண்டப் படைப்பு. (முதலில் வந்தது பா. ராகவன் எழுதிய மாயவலை: சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத இயக்கங்கள் குறித்த என்சைக்ளோபீடியா). வாழ்த்துகள் முகில்.
ஐந்தாவது காரணம்: ச. ந. கண்ணன்
கல்கியில் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே என்னை பிரமிப்பில் ஆழ்த்தியவர் ச.ந. கண்ணன். கல்கி ஆசிரியர் ஆளுக்கொரு தலைப்பு கொடுத்து அந்தத் தலைப்பில் செய்திகள் திரட்டிவரச் சொன்னார்கள். எனக்குக் கிடைத்தது அரசியல். கண்ணனுக்கு சினிமா. மருதனுக்கு இலக்கியம். முகிலுக்கு பொதுவான செய்திகள். நானும் மருதனும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் செய்திகள் திரட்டிவந்தோம். ஆனால் ச.ந. கண்ணனின் அணுகுமுறை அதிரடியாக இருந்தது. எல்லோருக்கும் ஒதுக்கப்பட்ட அனைத்து தலைப்புகளிலும் செய்திகள் திரட்டிவந்து, என்னை மூர்ச்சையடையச் செய்துவிட்டார்.

சினிமா, விளையாட்டு என்ற இரண்டு துறைகள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் கண்ணனுக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டு. இந்திய இளைஞர்களின் ஏகோபித்த நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் விரும்பும் அப்துல் கலாமை எழுதிய அவரே எல்லோரும் வெறுக்கும் இடி அமீனின் வாழ்க்கை வரலாறையும் எழுதியிருக்கிறார். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இடி அமீன். ஒரே ஆண்டில் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆறாவது காரணம்: மருதன்
என்னுடைய கிரியா ஊக்கி என்று மருதனைச் சொல்லவேண்டும். இடையில் வரும் எண்ணற்ற மனவருத்தங்கள், அதிருப்திகள் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டும்போது எல்லாவற்றையும் சுமந்துகொள்ளும் நண்பர் மருதன்.

புரட்சியாளர்கள் வரிசை என்று அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தபோது பிரமிப்பும் அதிர்ச்சியும் சேர்ந்தே வந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்தியப் பிரிவினை புத்தகங்கள் வாசகர்களின் விருப்பத்துக்குரிய புத்தகங்கள். நெல்சன் மண்டேலா வாசகர்களை ஊடுருவத் தொடங்கியிருக்கிறார்.
தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன். தொடர்ந்து எழுதுவேன்.
2 comments:
காரணங்கள் ஐந்து என்று சொல்லிவிட்டு ஆறு காரணங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்!
கிழக்கு ஆசிரியர்கள் எல்லோருமே சும்மா அடிச்சு ஆடுறீங்க. வாழ்த்துகள்.. :)
அன்பான முத்துக்குமார் அவர்களுக்கு
புத்தக கண்காட்சில் நீங்கள் கூறிய மறக்க முடியாத ஆறு காரங்களை படித்தேன். தன்னுடன் பனி புரியும் சக நண்பர்களின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகவும் மெய் சிளிகிறது .உங்கள் நட்பு நீண்ட நாள் தொடர என் வாழ்த்துக்கள்
Post a Comment