Friday, January 2, 2009

தி.மு.க தொடங்கி எல்.டி.டி.ஈ உள் அரசியல் வரை!



MiniMax - ஓர் அறிமுகம்

இந்தியாவையே உலுக்கியெடுக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அதைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன. ஒளி ஊடகங்களில் முதல் பதினைந்து நிமிடங்களைப் பிடித்துக் கொள்கின்றன. இதெல்லாம் எத்தனை நாளைக்கு? இரண்டு நாள். மூன்று நாள். மிஞ்சிப் போனால் ஒரு வாரம். பிறகு அது விஷயமாக ஏதேனும் பரபரப்பான சங்கதிகள் வெளியே வந்தால் மீண்டும் அது தொடர்பான செய்திகளைப் பார்க்கமுடியும்.

அந்தச் சம்பவம் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? அதன் சாதக, பாதகங்கள் என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் முழுமையான, நியாயமான, ஆதாரபூர்வமான பதிவுகள் எதுவுமே வருவதில்லை. இது அச்சு ஊடகம், ஒளி ஊடகம் எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஆழ்ந்து அலச விருப்பமில்லாமல் பரபரப்புக்காக வெறும் நுனிப்புல் மேய்வதில் எல்லோருமே ஆர்வம் செலுத்தினால் நிஜமான, முழுமையான பதிவுகளை யார் செய்வது?

0

இந்தியாவின் தலையெழுத்து யார் கையில் இருக்கிறது? வாக்காளர்கள் கைகளிலா? இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும் இந்தியாவின் எதிர்காலம் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் இருக்கிறது. எனில், அந்த அரசியல் கட்சிகளின் வரலாறு என்ன? அவர்களுடைய சித்தாந்தங்கள் என்ன? குறிக்கோள்கள் என்ன? இதுபோன்ற விஷயங்களுக்கு ஏதேனும் பதிவுகள் இருக்கின்றனவா என்று தேடினால் நிறைய தென்படுகின்றன. இங்குதான் சிக்கலும் தட்டுப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் வரலாறு என்பது அந்தந்த கட்சியைச் சேர்ந்த அபிமானிகள் அல்லது அனுதாபிகளால் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய உள்மனத்தின் கட்டளைகளுக்கு ஏற்பவே வரலாறைப் பதிவு செய்யவேண்டிய நிர்பந்தம் அவருக்கு. விளைவு, நியாயமான, முழுமையான வரலாறு என்பது வாசகனுக்குக் கிடைக்காமலேயே போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனில், அப்படிப்பட்ட பதிவுகளை யார் செய்யப்போகிறார்கள்?

0

நியூ ஹொரைஸன் மீடியா புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. பெயர், MiniMax.

அரசியல், வரலாறு, வாழ்க்கை, பொருளாதாரம், தீவிரவாதம், வர்த்தகம், நடப்பு நிகழ்வுகள், மருத்துவம் என்று பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறது MiniMax. சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் சுமார் நாற்பது புத்தகங்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றில் இருபது புத்தகங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாகி, வாசகர் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகள் உருவான கதையை சுவாரஸ்யமான நடையில் அறிமுகம் செய்யும் வகையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க ஆகிய புத்தகங்கள் வெளியாகியுள்ளன. எண்பது பக்க அளவிலான புத்தகங்கள் என்றபோதும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராயப்பட்டு, தெளிவான நடையில் எழுதப்பட்டுள்ளன.

தமிழர்களின் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்துவிட்ட ஈழப்பிரச்னை குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஒன்று, எல்.டி.டி.ஈ. விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது முதல் தற்போதைய செயல்பாடுகள் வரை சுருக்கமாக விவரிக்கிறது இந்தப்புத்தகம். அடுத்தது, எல்.டி.டி.ஈ உள் அரசியல். மாத்தையா தொடங்கி நேற்றைய கருணா வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்துபோன பலருடைய கதைகளை விவரிக்கிறது இந்தப்புத்தகம். இது
ஒரு உரசல்களின் சரிதம்.



123... சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட வார்த்தை. பாதி புரிந்து, மீதி புரியாமல் இருந்தாலும் இதைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. அது என்ன 123 ஒப்பந்தம்? அணுசக்தி வேண்டும் என்றால் அமெரிக்காவுடன் மட்டும்தான் ஒப்பந்தம் போட முடியுமா? அணுசக்தி அத்தனை அவசியமானதா என்ன? இதை ஏன் இடது சாரிகள் எதிர்க்கிறார்கள்? இப்படி பல கேள்விகள். அனைத்துக்கும் விடை சொல்லும் வகையில் வெளியாகியுள்ளது 123: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்ற புத்தகம்.


இந்தியாவில் சர்ச்சைக்குரிய மனிதர்கள் அதிகம். குறிப்பாக, அரசியல் துறையில். முக்கியமாகச் சொல்லவேண்டும் என்றால் அத்வானி, ஜெயலலிதா, மாயாவதி.. பட்டியல் வெகு நீளமானது. இந்த மூவருடைய வாழ்க்கை வரலாறுகள் MiniMax மூலம் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடுத்த ஐந்தாவது யுத்தம் என்று சொல்கிறார்கள் சமீபத்திய மும்பை தாக்குதலை. அதன் எதிரொலியாக இரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் மூள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற பேச்சு எழுந்துள்ளது. அந்த மும்பை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம், அதற்கான முன் தயாரிப்புகள் எங்கே நடத்தப்பட்டன, தாக்குதலுக்கு உதவியவர்கள் யார்? தாக்குதலை சமாளிக்கும்போது ஏற்பட்ட தடுமாற்றங்கள் என்ன? என்பன பற்றியெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வந்துள்ளன. முழுமையான செய்தியை ஒரே இடத்தில் பெறுவது சாத்தியமில்லை. இந்தச் சூழலில் மும்பை தாக்குதலைப் பற்றி 26/11 : மும்பை தாக்குதல் என்ற பெயரில் புத்தகம் ஒன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் MiniMax மூலம் வெளியாக இருக்கிறது.

இந்தியத் தொழில் துறையில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய விஷயம், அம்பானி சகோதரர்களின் பிரிவு. பாகப்பிரிவினைக்கு முன்னர் அது விஷயமாகப் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால் அதன்பிறகு பாகப்பிரிவினை எப்படிச் செய்யப்பட்டது, அதனால் இந்தியத் தொழில்துறையில் என்ன மாற்றம் உருவானது? யாருக்கு என்ன லாபம்? என்பன போன்ற விவரங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளிலேயே அதிகம் வெளியிடப்பட்டன. அம்பானி சகோதரர்கள் பிரிந்த கதையை ஆதியில் தொடங்கி மீதியில்லாமல் பதிவு செய்துள்ளது ‘அம்பானிகள் பிரிந்த கதை’ என்ற புத்தகம்.




உடலில் ஏதேனும் கோளாறு என்றால் உடனடியாக மருத்துவரை நாடுகிறோம். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை உட்கொள்கிறோம். அத்தோடு சரி. அதன்பிறகு மீண்டும் அதேரக உடல் உபாதை ஏற்பட்டால் மீண்டும் மருத்துவம். மீண்டும் மருந்துகள். ஆனால் அந்த உபாதைக்கு என்ன காரணம், அதை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி அடிப்படை விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. மருத்துவரிடம் ஆலோசனை கேட்க ஒதுக்கப்படும் நேரத்தில் நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் அவரால் விடை தரமுடியாது. எனில், இதற்கு என்ன மாற்று?



ஆரோக்கியம் தொடர்பாக யோகாசனங்கள், சித்த மருத்துவம், ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், தலைவலி உள்ளிட்ட அடிப்படைக் கையேடுகளும் வெளியாகியுள்ளன.

இன்னும் இன்னும் பல புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. அவ்வப்போது அறிமுகம் தொடரும்!

0 comments: