தேர்தல் இருந்தாலும் பரபரப்பு, இல்லாவிட்டாலும் அப்படியே இருக்கிறார் விஜயகாந்த். 'சபரி' படத்தின் இறுதி்கட்டப் படப்பிடிப்பு. ஈஞ்சம்பாக்கத்தில் மையம் கொண்டிருந்தார். ஈழத்தமிழர்கள் தொடர்பான காட்சி ஒன்று. அனலுக்கும் அதிரடிக்கும் கேட்கவேண்டுமா? அப்படியே ஆவி பறக்க வந்து உட்கார்ந்து பேசியதிலிருந்து:
ஈழத்தமிழர் விவகாரத்தில் நீங்கள் வலுவாக குரல் கொடுப்பதில்லை என்கிற விமர்சனத்துக்கு என்ன சொல்கிறீர்கள்?
(சட்டென்று உஷ்ணமாகிறார்) இப்போ சொல்லப்போற விஷயத்தால சண்டையே வந்தாலும் சரி. அப்படியே போடுங்க சார்.. இன்னிக்கு இருக்குற அரசியல்வாதிங்க சும்மா நான்.. நீன்னு போட்டி போட்டுட்டு இலங்கைப் பிரச்னையை அரசியலாக்கறாங்க. நான் ஈழத்தமிழர் பிரச்னைக்காக மூணு தடவை உண்ணாவிரதம் இருந்திருக்கேன். சிலோன் ஹை கமிஷனுக்கு முன்னால போராடியிருக்கேன். பெரியார் திடல்ல ஈழத்தமிழர்களுக்காக நாடகம் நடத்தி, கலெக்ஷன் பண்ணி கொடுத்திருக்கேன்.
கடந்த பதினைஞ்சு வருஷமா நான் பிறந்தநாளே கொண்டாடறதில்ல. அங்கே சுனாமி வந்தப்போ என்னைத் தவிர வேற யார் நிதி கொடுத்தாங்க? இத்தனைக்கும் மேல ‘தர்மபுரி'யில ‘இவங்கள்லாம் அகதிங்க இல்ல.. தமிழர்கள்'னு. ஒரு டயலாக் வச்சேன்.. இந்த டயலாக் காலத்துக்கும் நிக்கும். அதுதான் உணர்வுங்கறது. 90ல அகதியா வந்த குழந்தைகளை நான் படிக்க வச்சிருக்கேன். அன்னிக்கு நான் உதவினதுக்கு இன்னிக்கு நன்றிக்கடன் செலுத்தறாங்க. அப்போ ஈழத் தமிழர்களுக்காக நான் குரல் கொடுத்தப்போ இந்த அரசியல்வாதிங்க எங்கே போயிருந்தாங்க.
இதோ இந்த ‘சபரி' படத்துல ஈழத்தமிழர் பத்தி ஆயிரம் அடிக்கு ஒரு சீன் வச்சிருக்கேன். இதுதான் உணர்வு.. ஆனா இந்த அரசியல்வாதிங்க ஆ.. ஊன்னா இந்திய அரசு தலையிடணும்னு சொல்றாங்க.. ஏற்கெனவே அமைதிப்படை போய் என்ன நடந்துச்சுன்னு தெரியும்ல.. ஈழப்போராட்டம் மண்ணுக்காக நடக்கும் போராட்டம்.. நிச்சயம் ஜெயிச்சே தீரும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் குரல் கொடுக்கறது உணர்வை வெளிப்படுத்த.. அவங்க குரல் கொடுக்கறது அரசியலுக்காக. அதேசமயம் இவங்களை மாதிரி குதியாட்டம் போட நான் விரும்பல.
நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் சேருகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வருகிறார்கள்? பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?
‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க எடுக்கற திடகாத்திரமான முடிவு பிடிச்சிருக்கு.. அதனாலதான் வந்தோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ நடக்குற அரசியல் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி அரசியலைத் தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க ஒழுக்கமாகவும், கட்சியோட கொள்கைக்கு கட்டுப்பட்டும் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.
கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்க ஊழல் செய்தவங்களுக்கு கட்சியில இடம் கொடுத்திருக்கீங்களே?
எங்க கட்சியில பொன்னுசாமி வந்தபிறகுதான் இப்படிச் சொல்றாங்க. நான் கேட்கறேன்.. எந்தக் கட்சியிலதான் ஊழல்வாதிங்க இல்ல.. முந்தின கலைஞர் ஆட்சியில குற்றம் சாட்டப்பட்ட சேடப்பட்டி முத்தையாவும், இந்திரகுமாரியும் இப்போ தி.மு.கவுலதானே இருக்காங்க. ஆக, பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி.. ஆனா நான் செய்தா தப்பு. என்ன நியாயங்க இது? பொன்னுசாமி செய்த தப்புக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து அதை அவரும் முழுசா அனுபவிச்சுட்டாரு. தண்டனை கொடுக்கறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குத்தானே. பிறகு ஏன் கட்சியில சேர்க்கக்கூடாதுன்னு கேட்கறேன்.. எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு.
இப்படிப்பட்டவர்களைக் கட்சியில் சேர்த்துவிட்டு, கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறீர்களா?
இல்லவே இல்ல. பத்திரிகைகள் கேட்கறப்போ பதில் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கு. நான் செய்றது சரின்னு எனக்குப் பட்டதாலதான் எதுவுமே செய்யறேன். அதனால பதில் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. வருத்தமுமில்ல. ஒண்ணு சொல்றேன் சார்.. நாட்டுல ஏகப்பட்ட நதிகள் இருக்கு. அத்தனையும் போய் நேரா கடல்லதான் கலக்குது. அப்படி எத்தனை நதிகள் கலந்தாலும் கடலோட தன்மை மாறாது. அது மாதிரிதான் எப்படிப்பட்டவங்க
என் கட்சிக்கு வந்தாலும் என் கட்சியோட கொள்கை, செயல்பாடு எதுவும் மாறாது. மாறவும் விட மாட்டேன்.
இன்றைக்கு எந்த அரசியல் தலைவரின் பேட்டியிலும் உங்களைப் பற்றி ஒரு கேள்வியாவது தவறாமல் இடம் பெறுகிறது. அவர்களும் உங்களை விமர்சிக்கிறார்கள்.. இது உங்களுக்கு பலமா.. பலவீனமா?
சார்.. நான் அவங்களை நினைச்சு கட்சி ஆரம்பிக்கல. அதனால அவங்களோட விமர்சனங்களைப் பத்தி நான் கவலைப்படறதில்ல. அவங்க குறைசொல்றதையும்
நான் பெரிசா எடுத்துக்கறதில்ல. என்னோட சிந்தனை முழுக்க முழுக்க மக்கள் தொடர்பானது. நான் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கேன். மத்தவங்கள்லாம் பழசு. அதனால இவங்களைப் பத்தி மக்களுக்கு நல்லாவே தெரியும். அதனால நான் மாற்றுகட்சியினரோட விமர்சனங்களைப் பத்தி பெரிசா கவலைப்படுறதில்ல.
சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை வைத்து உங்கள் தேர்தல் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் எண்ணம் வந்திருக்கிறதா?
கூட்டணி வைக்கப் போறீங்களான்னு கேட்கறீங்களா? கண்டிப்பா மாட்டேன். பன்னிரண்டு வயசுல இருந்து அரசியல்ல இருக்கேன். இடையில பதினைஞ்சு வருஷம் முழு மூச்சா சினிமாவுல இருந்துட்டேன். ஆனா அரசியலை உன்னிப்பா கவனிச்சுட்டுதான் வந்தேன். அதனால எனக்குக் கூட்டணி தேவையில்லன்னுதான் தோணுது. சமீபத்துல பண்ருட்டியார்கூட ஒரு கூட்டத்துல சொன்னார். ‘எங்க கேப்டனுக்கு சாப்பாட்டுல பொறியல், வறுவல் எல்லாமே பிடிக்கும். ஆனா கூட்டு மட்டும் பிடிக்காதுன்னு. அதுதான் உண்மை.
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க. அது ஒருபக்கம் இருக்கட்டும். எங்களுக்கு மேல்தட்டு, நடுத்தர மக்களோட ஆதரவு இல்லாமலா அத்தனை சிட்டிலயும் இவ்ளோ வோட்டு வாங்கியிருக்கோம். அதுக்கு என்ன அர்த்தம்.. அப்படியே கீழ்தட்டு மக்கள் அவங்களுக்கு வோட்டு போடாம எனக்கு போட்டிருக்காங்கன்னா இந்தக் கட்சிகள் கீழ்த்தட்டு மக்களுக்கு எதுவுமே செய்யலன்னு தானே அர்த்தம். எல்லா தரப்பு மக்களுமே இப்போ மாற்றத்தை விரும்பறாங்க. அதனால எல்லோருமே எனக்கு ஆதரவு தர்றாங்கங்கறதுதான் உண்மை.
காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற தேசியக் கட்சிகள் பற்றிய உங்கள் பார்வை?
மாநிலக் கட்சியோட முதுகுல ஏறி சவாரி பண்ணினா அதுக்கு பேரு தேசியகட்சியா? தனிச்சு நின்னு தேர்தலை சந்திச்சாதானே அவங்களோட பலம் தெரிய வரும். அப்படி செய்யாம இன்னொரு மாநிலக் கட்சியோட கூட்டு வச்சுகிட்டு நாங்க பெரிய தேசியக் கட்சின்னு சொல்லிக்கறதுல என்ன பெருமை இருக்குன்னு கேட்கறேன். அப்படி செய்தா அவங்களைப் பத்திப் பேசலாம்.
‘குடிகாரர்' போன்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
(யோசித்தபடியே) அவங்களோட விமர்சனத்தை நான் மறந்துட்டேன்.. மன்னிச்சுட்டேன். அவ்வளவுதான். இப்போ என் கட்சியை எப்படி வளர்க்கறதுங்கறதுல தான் என்னோட கவனம் இருக்கு. நான் ரொம்ப மன உறுதி உள்ளவன். தினமும் யோகாசனம் செய்யறேன். அதனால எப்படிப்பட்ட விமர்சனத்தையும் என்னால சுலபமா சமாளிச்சுட முடியும்.
அடுத்த மாநாடு எப்போது?
மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களுக்கு அதிக செலவு வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ நான் டெம்போ வேன்ல பிரச்சாரம் பண்ணினேன். மீட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.
கட்சி ஆரம்பித்தபிறகு உங்கள் படங்களில் அரசியல் நெடி சற்று தூக்கலாக இருக்கிறதே?
இப்போ ‘தர்மபுரி'ல ‘தீபம்' பதிச்ச மோதிரம் போட்டு நடிச்சேன். அதுக்கு யாரும் எதிர்ப்பு சொல்லலையே. இந்த மாதிரி அரசியல் விஷயங்களை என் சொந்தப் படத்துலதான் வச்சுப்பேன். வெளிப்படத்துல அவங்க விருபப்பட்டா வைப்பேன். இல்லன்னா விட்டுடுவேன். ஆனா அந்த மாதிரி சீனே வைக்கக்கூடாதுன்னு நெருக்கடி வந்தா ‘நீங்க வேணாங்க'ன்னு சொல்லிட்டு சொந்தப் படம் எடுத்துட்டு போய்டுவேன். அந்த தெம்பு எனக்கு இருக்கு.
படங்களில் இன்னமும் குத்தாட்டம் போடுகிறீர்களே..?
(பலமாகச் சிரிக்கிறார்) நாட்டுப்புற பாட்டுங்கறதாலதான் ஆடினேன். அவசியம் வேணுமான்னு கேட்பேன். ரொம்ப வலியுறுத்தினா ஆடுவேன். அதேசமயம் கட்டிப்பிடிச்செல்லாம் ஆடறது இல்லையே. சும்மா டான்ஸ்தானே ஆடறேன். அரசியலுக்கு வந்துட்டதால டான்ஸ் கூட ஆடக்கூடாதுன்னா எப்படி சார்?
(டிசம்பர் 2006ல் கல்கி இதழுக்காக நான் எடுத்த பேட்டியிலிருந்து)
பாவம் பண்ருட்டியார்!
Thursday, December 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன்//
இதுக்காகவே உடனே கட்சியிலை என்னை இணைச்சுக்கலாம்னு இருக்கேன்.
//இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு. //
:))))))))
///என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.////
டீச்சர் டீச்சர் இவன் பென்சில எடுத்துகிட்டு தரமாட்டேன்கிறான் டீச்சர்!
வேனா அழுதிடுவேன்
இவர் கூறுவதை காப்பியடித்து விடுகிறார்களாம்! குழந்தைத் தனமான பேச்சாய் இருக்கிறது. லஞ்சமும் ஊழலும் எந்தக் கட்சியில் தான் இல்லை என்று கேட்பதைப் பார்த்தால்; இவை தன் கட்சியுலும் நடக்கக் கூடியவைதான் என்று கோடிட்டுக் காட்டுவதைப் போலத்தான் உள்ளது.
//என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க. //
இருந்தா தானே சொல்றது. இதை பத்திரிக்கை காரர்களுக்கு எத்தனை தடவை தான் சொல்றது.
"மன்னிப்பு" அவருக்குத்தான் பிடிக்காத வார்த்தை ஆச்சே?
Post a Comment