Wednesday, November 19, 2008

இந்திரா - முக்திபாஹினி - பங்களாதேஷ்

பிரிவினை கோஷம் எழாத தேசத்தை உலக வரைபடத்தில் தேடுவது அத்தனை சிரமமான விஷயம். பாகிஸ்தானும் அப்படித்தான். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்ற புதிய தேசம் உருவான நொடியில் இருந்தே கிழக்கு பாகிஸ்தானில் பிரிவினை கோஷம் எதிரொலித்துக்கொண்டுதான் இருந்தது.

கலவரம். பேரணி. பொதுக்கூட்டம். மறியல். ஊர்வலம். எல்லாம் நடக்கும். அடிக்கடி நடக்கும். அவ்வப்போது சிறிய அளவில். எப்போதாவது பெரிய அளவில். அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து கொண்டிருந்த கலவரங்கள் திடீரென மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. அதுவும், இந்திரா பிரதமாகப் பதவியேற்ற ஒரே வாரத்தில்.

கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷ் என்னும் தனிதேசமாக அறிவிக்கவேண்டும் என்பதுதான் கோரிக்கை. அறிவித்தாலே ஆயிற்று என்று அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுக்கக் கலவரம். பதற்றம். ரகளை. எல்லாம் பாகிஸ்தானில் மாத்திரம் அல்ல, எல்லை வழியாக இந்திய பிராந்தியத்துக்குள்ளும் நுழைந்திருந்தது.

ஏராளமான மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவுக்குள் அகதிகளாக வரத் தொடங்கினார். ஆபத்து, ஆகவே அடைக்கலம் என்று நம்மை நம்பி தேடி வருபவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. அதற்காக அளவுக்கு மீறி அனுமதிக்கவும் முடியவில்லை. காரணம், திடீர் இடப்பெயர்ச்சியை இந்தியாவால் தாங்கிக்கொள்வது சிரமம். ஆனாலும் அனுமதிக்கப்பட்டனர்.

‘பாகிஸ்தானின் அநியாயங்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இங்கே என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும். வந்து குவிந்திருக்கும் அகதிகள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்குத் திரும்பவும் மேலும் அகதிகள் இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்கவும் பாகிஸ்தான் முக்கியமான அரசியல் முடிவை எடுக்கவேண்டும். அதற்கு உலக நாடுகள் வலியுறுத்தவேண்டும். பாகிஸ்தான் தன்னுடைய சொந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்தியாவைப் பகடையாக்கக்கூடாது’

உரத்த குரலில் பேசினார் இந்திரா. யுத்தம் தொடுப்பதில் இந்திராவுக்கு இந்திராவுக்கு விருப்பமில்லை.

‘அகதிகள் வருகிறார்கள். இந்தியா பிதுங்குகிறது. பிரச்னைகள் பெருகும். எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் அவர்களுடைய சூழ்நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் நமக்குப் பிரச்னை என்றாலும் வங்கதேசத்தின் சுதந்தரப் போராட்டத்தை நாம் புறந்தள்ளக்கூடாது. மாற்றுவழி என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும்‘

உலக நாடுகள் எதுவும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானும் இறங்கிவருவதாகத் தெரியவில்லை. நேராக அகதிகள் முகாமுக்குச் சென்றார் இந்திரா. எல்லோரையும் நேரில் பார்த்து விசாரித்தார். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அகதிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிட்டது என்று தெரிந்ததும் தூக்கிவாரிப்போட்டது.

மாற்றுவழி என்றதும் இந்திராவின் நினைவுக்கு வந்தது முக்தி பாஹினி. பங்களாதேஷ் உருவாக்கத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போராளி இயக்கம்.

0

டிசம்பர் 3, 1971. இந்தியாவுக்கு சொந்தமான விமானப் படைத்தளங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் குண்டுகளை வீசின. அடுத்தத்து பல தளங்கள் மீது. மொத்தம் ஒன்பது தளங்கள் மீது தாக்குதல் நடந்தது.

கல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார் இந்திரா. அவருடைய கைகளில் துண்டுச்சீட்டு திணிக்கப்பட்டது.

‘பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கிவிட்டது’

பேச்சை நிறுத்தினார்.

‘நல்லவேளை, அவர்கள் முந்திக்கொண்டார்கள். இல்லாவிட்டால்..‘

ரகசிய குரலில் சொல்லிவிட்டுப் புன்னகை செய்தார் இந்திரா. அதன் அர்த்தம் அதிகாரிகளுக்குப் புரிந்தது.

0

விமானம் மூலம் டெல்லி வந்திறங்கினார் இந்திரா. அமைச்சர்வை சகாக்களோடு ஆலோசனைகள் நடந்தன. அடுத்ததாக எதிர்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு, சம்பிரதாயத்துக்கு. பிறகு வானொலியில் உரை. பேசத் தொடங்கினார் இந்திரா.

‘மீண்டும் ஒருமுறை யுத்தம், அதுவும் பாகிஸ்தான் மீது. நம்மீது திணிக்கப்பட்ட யுத்தம் இது. ஆனாலும் வெற்றி அவசியம். ஒத்துழைப்பு தேவை’

மறுநாள் நாடாளுமன்றத்திலும் இதனையே வலியுறுத்திப் பேசினார் இந்திரா.

பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கியது இந்திய ராணுவம். இந்தியப் படைக்குத் துணையாக முக்தி பாஹினியின் ஒரு லட்சம் வீரர்களும் சேர்ந்துகொண்டனர். தாக்குதலின் வீரியம் அதிகரித்தது. நிற்காமல் தொடர்ந்தது. சேதம் பாகிஸ்தானுக்குத்தான் அதிகம். யுத்தம் நடப்பதை நாடாளுமன்றத்துக்கு நேரடியாக தகவல் சொன்னார் இந்திரா.

0

டிசம்பர் 16, 1971. மாலை ஐந்துமணி இருக்கும். ஸ்வீடன் நாட்டு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார் இந்திரா. தொலைபேசி சிணுங்கியது. எதிர்முனையில் முப்படைத் தளபதி மானிக்ஷா.

‘வெற்றி. எல்லோரும் சரணடைந்து விட்டார்கள்’

புன்னகை ததும்பி வழிந்தது இந்திராவுக்கு. பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு நாடாளுமன்றம் நோக்கி விரைந்தார் இந்திரா.

‘மகிழ்ச்சிகரமான செய்தியை அவைக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேற்கு பாகிஸ்தான் படையின் எந்தவித நிபந்தனையும் இன்றி சரணடைந்துவிட்டனர். டாக்கா இப்பொழுது சுதந்தர தேசத்தின் சுதந்தரமான தலைநகரம். இதற்காக இந்தியா மகிழ்ச்சியடைகிறது. வங்கதேச சுதந்தரத்துக்காக நம்மோடு இணைந்து போராடிய முக்தி பாஹினி இளைஞர்களைப் பாராட்டுவோம். நம்முடைய ராணுவ வீரர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வோம். இந்த நிமிடம் முதல் வங்கதேசம் ஒரு சுதந்தர தேசம்’

0

உடனடித் தேவை, இன்னொரு இந்திரா!

3 comments:

Anonymous said...

\\இந்தியாவுக்கு சொந்தமான விமானப் படைத்தளங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் குண்டுகளை வீசின. அடுத்தத்து பல தளங்கள் மீது. மொத்தம் ஒன்பது தளங்கள் மீது தாக்குதல் நடந்தது.//

Like Indian Fisher mans


SOOOOOOOOO

do it

fist

Vaandu said...

Good style.Keep going...

பிரதிபலிப்பான் said...

பிற நாட்டினர் மீது அடக்குமுறையை கையாளக் கூடாதென்பது தான் நம்நாட்டின் அரசியல் கோட்ப்பாடு, கொள்கை.

தேவைப்பட்டால் மட்டுமே அதை கையிலேந்த வேண்டும்.நாம் வளர்ந்து வரும் நேரத்தில் மற்ற தேசங்களை நாம் அரவணைத்துச் செல்ல வேண்டுமே தவிற அடக்குமுறைக்கு கையாளக் கூடதென்பது என்னுடைய தாழ்மையான கருத்து.