Monday, January 10, 2011

சென்னை புத்தகக் காட்சி - வெற்றிகரமான இரண்டாவது வாரம்!

34வது புத்தகக் காட்சியை கலைஞர் திறந்துவைக்கவில்லை. பலபேருக்கு அதில் மகிழ்ச்சி. புத்தகக் காட்சிக்கு அவரால் கிடைக்க வேண்டிய விளம்பரம் கிடைக்காததில் எனக்கு நிறைய வருத்தங்கள்.

கடந்தமுறை சென்னை முழுக்க நிறைய இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இம்முறை அப்படி இல்லை. சென்னை சங்கமத்துக்கு செய்திருக்கும் விளம்பரங்கள் அபாரம். பபாசி கவனிக்க.

வழக்கமாக நடைபாதை மோசமாக இருக்கும். இம்முறை நன்றாக இருக்கிறது. அறுகோணக் கற்களால் ஆன நடைபாதை. அதிலும் மண், தூசு படிந்திருப்பதாக பத்ரி குறைபட்டுக்கொண்டார். என்னைக் கேட்டால் இதுவே அதிகம்.

வழிநெடுக நிறைய ஃப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, குமுதம். நடிகை ஜெனிலியாவுக்கு குமுதம் தலையங்கம் பிடிக்கும் என்று எழுதிவைத்திருந்தார்கள். சிலிர்ப்பாக இருந்தது. என். சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் என்கிற Column ரீமா சென்னுக்குப் பிடிக்குமாம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

புத்தக அரங்குக்கு நுழைவதற்கு முன்னரே பாப்கார்ன், பழத்துண்டுகள், கடலை விற்பவர்கள் வலைவரித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் சிக்கிவிடுகிறார்கள். ஆகவே, பெற்றோர்களும். வயிற்றுக்கு மிஞ்சியதுதான் புத்தகத்துக்கு. வாழ்க வியாபாரிகள்!

ஏர்டெல் சூப்பர்சிங்கர் என்று சேர்த்துச்சேர்த்துச் சொல்வது போல புதிய தலைமுறை அரங்கு என்று மூச்சுக்கு முந்நூறு தடவை மைக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தமுறை கிழக்கு அரங்கு என்று அறிவிக்கக்க்க்க்க்க்கூடுடுடும்ம்!

விலைவாசி உயர்வு டிக்கெட் கட்டணத்தைப் பாதிக்கவில்லை. அதே ஐந்து ரூபாய்!

அரங்கில் இருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். விவேகானந்தர் பாதை. ஒளவையார் பாதை. ரபீந்திரநாத் தாகூர் பாதை. ஷெல்லி பாதை என்று ஏராளமான பாதைகள். கடைகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பெயர்கள் பயன்படுகின்றன. அதற்கு பாதையின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம்.

முக்தா சீனிவாசனைத்தான் முதலில் பார்த்தேன். அவருடைய அனுபவங்கள் சிலவற்றைப் புத்தகமாக்கியிருந்தார். தன் வரலாறு உள்பட. விலை மிகவும் அதிகம். அருகில் இருந்த பெண் வாசகர் ஒருவர் விலை பற்றிக் கேட்டார். சரி, நீயே ஒரு விலை சொல்லி எடுத்துக்கோ என்றார். சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டேன்.

தினத்தந்தியில் விற்பனை படுவேகம். அநேகமாக இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் 1 செல்லர் வரலாற்றுச் சுவடுகளாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும். திரளும் கூட்டத்தின் வேகம் அப்படி இருக்கிறது!

வரிசைக்கிரமமாக எல்லாக் கடைகளையும் பார்க்கவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் முடியவில்லை. விடியல், அலைகள், ஆழி, பாரதி புத்தகாலயம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், வே. ஆனைமுத்து அவர்களுடைய ஸ்டால் என்று சில குறிப்பிட்ட ஸ்டால்களையும் அவற்றின் பாதை மற்றும் எண்ணைக் குறித்துக்கொண்டு நேராக கிழக்கு ஸ்டால் பக்கம் வந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத்தொடங்கி 2010ல் வெளியாகும் என (என்னால்) எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்கள் மூன்று. திராவிட இயக்க வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2. மூன்றாவது புத்தகம், சஞ்சய் காந்தி. முதல் நாளில் தி.இ.வ. இரண்டாவது பாகம் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. இரண்டு நாள் கழித்துதான் முதல் பாகம் விற்பனைக்கு வந்தது. வாசகர்கள் மத்தியில் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு. இரண்டு பாகங்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் விற்கின்றன. ஒரே பாகமாகப் போட்டிருக்கலாமே என்று சில வாசகர்கள் கேட்டார்கள். தயாராகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னேன். பத்ரி மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக.

இங்கே தமிழ்நாட்டில் புயலையோ, புழுதியையோ கிளப்பியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வளையவருகிறார் ராகுல் காந்தி. இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பைக்கொண்டு அரசியல் மாற்றம் காண விரும்பும் அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதா என்பது தெரியாது. ஆனாலும் இதே இளைஞர் காங்கிரஸை வைத்து ஒருகாலத்தில் சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டங்கள் பற்றிய பல செய்திகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. அடுத்து, எமர்ஜென்ஸியின்போது அவர் செய்த அத்துமீறல் காரியங்களில் இருந்து காங்கிரஸ் தன்னை விலக்கிவைத்துக்கொள்ள எத்தனிக்கும் செய்திகள் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. ஆக, இந்த இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக்கொண்டு சஞ்சய் காந்தியின் அரசியல் வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறேன். முடிந்தால் வாங்கி, முடியாவிட்டாலும் வாசித்துப் பாருங்கள்! இந்திய வரலாற்றில் சில அதிர்ச்சியூட்டும் பக்கங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்!

என்னுடைய நண்பர்கள் எழுதியுள்ள பல புத்தகங்கள் நல்ல அளவில் விற்பனையாவதை நேரில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். முக்கியமாக, ச.ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன். மூன்றிலக்க எண்ணிக்கையை அநாயாசமாகத் தொடுகிறார் ராஜராஜ சோழன். அநேகமாக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் ஒன் பட்டம் ராஜராஜ சோழனுக்குத்தான் கிடைக்கும் என்றே தெரிகிறது. இல்லாவிட்டாலும் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் கண்ணன். நியாயஸ்தர்.

மருதனுக்கும் முதல் உலகப்போருக்கும் நிறைய ரசிகர்கள் மற்றும் வாசகர்கள். ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் என்று மனிதர் செம பிஸி. இரண்டாம் உலகப்போரும் சக்கை போட்டு போட்டுக்கொண்டிருக்கிறது.

கல்யாணம் முடித்த கையோடு கிளியோபாட்ராவையும் எழுதிமுடித்த முகிலுக்கு இந்த ஆண்டு கூடுதல் வரவேற்பு. அவருடைய பிரும்மாண்டப் படைப்பான அகம் புறம் அந்தப்புரம் தினம் தினம் மிரட்டிக்கொண்டிருக்கிறது. முகிலின் வயது அறுபது என்று நினைத்து வரும் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. இன்ப அதிர்ச்சி.

கிழக்கு வாசகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு இணங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வந்துவிட்டார். எழுதியவர் பாலு சத்யா. அவரைப் போலவே அவர் எழுதிய புத்தகமும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சாதித்துக்கொண்டிருக்கிறது.

தேவர் புத்தகம் போல கிழக்கு வாசகர்களின் விருப்பமாக தமிழ்நாடு சுற்றுலா கையேடு என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. எழுதியவர் தமிழ் சுஜாதா. ப்ராடிஜி பதிப்பகத்தின் ஆசிரியர். தமிழ்பேப்பர் டாட் நெட் இணைய இதழில் பெண் மனம் என்ற பத்தியை எழுதுபவர். தீவிர சுற்றுலாப்பிரியர். சுற்றுலா ஆசை இருக்கும் அத்தனைபேரையும் கவர்ந்துள்ளது இந்தப்புத்தகம்.

கிழக்கின் நிரந்தர சூப்பர்ஸ்டாரான பா. ராகவன் இம்முறை இரட்டை கோபுரத் தாக்குதல்.. காஷ்மீர் : அரசியல் ஆயுத வரலாறு. தொடர்ந்து டாப் 5 பட்டியில் இருக்கிறது. அடுத்தது, ஆர்.எஸ்.எஸ். டாப் டென் பட்டியலில் நானும் எனது நண்பர்களும் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. டாலர் தேசம், மாயவலை, நிலமெல்லாம் ரத்தம் எல்லாம் வழக்கம்போல கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு. இவைதவிர, ஜெயமோகனின் உலோகம், கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு. பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை.. ஐ மீன்.. பத்ரி எழுதிய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை புத்தகத்தைப் பார்த்த அத்தனை வாசகர்களுமே ஆச்சரியப்பட்டனர். அதற்குள்ளேவா? இத்தனூண்டா? என்று நிறைய காரணங்கள்.

கிழக்கில் எங்களுடைய ஜூனியரான சுஜாதாவுக்கு வாசகர்கள் அபார வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். பிரிவோம் சந்திப்போம், மீண்டும் ஜீனோ என்று சுஜாதா ரசிகர்களுக்கு கிழக்கு ஸ்டால் ஃபுல் மீல்ஸ் வழங்குகிறது.

கிழக்கு தவிர்த்து மற்ற ஸ்டால்களுக்கு வரும் புதன்கிழமை முதல் செல்ல இருக்கிறேன். நிறைய புத்தகங்களைக் குறித்துவைத்திருக்கிறேன். வாங்கவேண்டும்.

சேல்ஸ் நண்பர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். பிள்ளையார் சுழியாக பிரசன்னா. ஒரே ஆள்.. ஜெயமோகனுக்கு கொ.ப.செவாகவும் சுஜாதாவுக்கு செயலாளராகவும் மாறிமாறி தூள்கிளப்புகிறார். அவ்வப்போது திராவிட இயக்க வரலாறின் ஒரு பாகத்தை வாங்குபவர்களிடம் இன்னொரு பாகத்தையும் வாங்கச்சொல்கிறார். பார்க்க சந்தோஷமாக இருந்தது.

விஜயகுமார், பாண்டியன், பழனி என்ற மும்மூர்த்திகளால் எப்படித்தான் வாசகர்களின் புயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடிகிறதோ! எத்தனை விதமான வாடிக்கையாளர்கள்! எல்லோரையும் கூலாக சமாளிக்கிறார்கள்! கல்லா கச்சிதமாக நிறைகிறது!

திங்கள் மாலை புத்தகக் காட்சியை வலம்வந்துகொண்டிருக்கும்போது ஒரு நல்ல செய்தி. கிழக்கி வெளியீடுகளான காப்புரிமை மற்றும் சந்திரயான் புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்துள்ளதாக நண்பர் பாலு சத்யா சொன்னார். காப்புரிமை புத்தகத்தை எழுதிய ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கு உடனடியாக விஷயத்தைச் சொல்லி வாழ்த்து சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். எதிரே பத்ரி. ஆட்சி மாறாமல் இருந்தால் அநேகமாக அடுத்த ஆண்டு விருது ஸ்பெக்ட்ரம் பத்ரிக்குத்தான்!

Thursday, January 6, 2011

திராவிட இயக்க வரலாறு!

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழக மக்கள் அதிகம் உச்சரித்த பெயர்கள் என்று நான்கைச் சொல்லலாம். பெரியார். அண்ணா. கலைஞர். எம்.ஜி.ஆர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த இந்த நான்கு ஆளுமைகளின் அரசியல் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்யும் வகையில் தனித்தனி புத்தகங்கள் எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு.

பெரியாரில் தொடங்கினேன். அள்ள அள்ளக் குறையாத அவருடைய எழுத்துகள் என்னை பிரமிக்க வைத்தன. பிறகு வாசிப்பை அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நீட்டித்தபோது என்னுடைய கனவு பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆம். தனித்தனி வாழ்க்கை வரலாறுகளைக் காட்டிலும் இந்த நான்கு சக்திகளும் நிலைகொண்டிருந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் ஆர்வம் முளைவிட்டது.

தேடலைத் தொடங்கியபோது திராவிட இயக்கம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் கிடைத்தன. குறிப்பாக, நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன் எழுதிய புத்தகங்கள். நீதிக்கட்சியைப் பற்றிய ஓரிரு ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை அச்சில் இல்லை; தீவிரமான தேடலுக்குப் பிறகு இணையத்தில் கிடைத்தன.

தகவல் செறிவு நிறைந்த புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை எல்லாம் திராவிட இயக்க வரலாற்றின் தனித்தனி அத்தியாயங்களாக மட்டுமே பார்க்கமுடியும் என்பது புரிந்தது. திராவிட இயக்க சித்தாந்தத்தின் தோற்றம் தொடங்கி கட்சி அரசியல் வரையிலான முழுமையான பதிவின் அவசியத்தையும் உணர முடிந்தது. எழுதத் தொடங்கி விட்டேன்.

*

புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. நீதிக்கட்சி முதல் அண்ணா ஆட்சி வரை முதல் பாகம். அண்ணாவுக்குப் பிறகான அரசியல் வரலாறு இரண்டாவது பாகம்.

திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக நீதிக்கட்சியைக் குறிப்பிடுவதுதான் பொதுவான வழக்கம். நான் சற்றே மாறுபடுகிறேன். திராவிட இயக்க வரலாறு என்பது தனிப்பட்ட கட்சியின் வரலாறு அல்ல; தென்னிந்தியாவில் உருவான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாறு; ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் வரலாறு. அதன் ஆணிவேர் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையில் தொடங்குகிறது. ஆகவே, 1909ல் உருவான சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறைத் தொடங்கினேன்.

நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்கு முந்தைய பிராமணர் அல்லாதார் இயக்கங்கள் - அரசியல் சூழல், நீதிக்கட்சி உருவான வரலாறு, நீதிக்கட்சி அரசின் சாதனைகள் - சறுக்கல்கள், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, மொழிப்போராட்டம், திராவிட நாடு கோரிக்கை, திமுக தோன்றிய பின்னணி, அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு என்று அறுபது ஆண்டுகால அரசியல் வரலாறை முதல் பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

கலைஞர் தலைமையில் திமுக செயல்பட்ட விதம், பெரியாரின் மறைவு, எம்.ஜி.ஆரின் விலகல், திமுகவின் எதிர்நீச்சல், மாநில சுயாட்சிக் கோரிக்கை, சமூக நீதிப் போராட்டம், ஈழப்பிரச்னை, ஜெயலலிதாவின் வருகை, மறுமலர்ச்சி திமுகவின் உருவாக்கம் என்று அண்ணாவுக்குப் பிறகான நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாறை இரண்டாவது பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

*

வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது, மூலக்கருத்து மாறிவிடாமலிருக்க, தொடர்புடைய தலைவர்களிள் மேற்கோள்களை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளேன். தலைவர்களுடைய சொல்லாடல்களைப் படிக்கும்போது வாசகர்களுக்கு செய்தியின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதன்மூலம் தமிழகத்தின் நூறாண்டுகால அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் என்னுடைய நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும். இனி இது உங்கள் சொத்து.

அன்புடன்

ஆர். முத்துக்குமார்
15 டிசம்பர் 2010

(திராவிட இயக்க வரலாறு புத்தகத்தில் நான் எழுதிய முன்னுரையில் இருந்து..)

புத்தகத்தை இணையத்தில் வாங்க

திராவிட இயக்க வரலாறு - பாகம் 1

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2

Friday, July 23, 2010

சீனிவாசா, அப்துல் கலாம், நான்

மூவாயிரம் பேருக்கு முன்னால் மைக் பிடித்துப் பேசியது இதுதான் முதல்முறை. அத்தனை பேரும் மாணவ – மாணவிகள். மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். சீனிவாசா பாடசாலை என்று எனக்கு அறிமுகமான பள்ளி அது. அந்தப் பகுதியில் பிரபலமான பள்ளிகளுள் முக்கியமானது. நான் படித்த திவான் பகதூர் தி. அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப் பள்ளியும் அந்தப் பகுதியில் ஏகப்பிரபலம்.

சீனிவாசா பள்ளி மாணவர்களுடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது பள்ளி நிர்வாகம். சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்திருந்தார் பா. ராகவன். இந்தமுறை நான், பத்ரி, முகில்,கே.எஸ். நாகராஜன் நால்வரும் சென்றோம்.

ஆளுக்கொரு தலைப்பு. அறிவியல் அறிஞர்களை அறிந்துகொள்வோம் என்பது என்னுடைய தலைப்பு. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்ற தலைப்பு பத்ரிக்கு. படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில். கம்ப்யூட்டரைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது கே.எஸ்.நாகராஜனுக்கான தலைப்பு.

பத்தே முக்காலுக்கு கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் நான் பேசினேன். மேடைக்குப் பக்கத்தில் வேதியியல் ஆய்வகம். ஆனாலும் பியூரெட், பிப்பெட், டெஸ்ட் டியூப் என்று எதைப் பற்றியும் பேசமாட்டேன், அறிவியலுக்குள் தப்பித்தவறியும் நுழைய மாட்டேன், தொழில்நுட்பத்தின் பக்கமே செல்லமாட்டேன்.. என்று மாணவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுத்தான் பேசத் தொடங்கினேன். தினம் தினம் பள்ளி ஆசிரியர்களும் அதைத்தானே செய்கிறார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்வது.. அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைச் சொல்வது.. ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்கு அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த விஷயத்தைச் சுவைபட சொல்வது, தோல்விகள் துரத்தியபோது அதிலிருந்து மீள என்ன செய்தார்கள், வெற்றியை எப்படிப் பார்த்தார்கள்.. இவற்றையெல்லாம் கதை போல மாணவர்களுக்குச் சொல்லவேண்டும்.. ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை.. இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்பது.. பதில் பெறுவது… பேச வைப்பது… இப்படித்தான் என்னுடைய கலந்துரையாடலை அமைத்துக்கொண்டேன்.

அப்துல் கலாம் என்ற மனிதர் மாணவர்களுடைய மனத்துக்குள் எத்தனை ஆழமாக ஊடுருவியிருக்கிறார் என்பதை விவரிக்கவே முடியவில்லை.. அடேயப்பா… இன்றைய மாணவர்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். உண்மையில் நான் கலாமைப் பற்றிப் பேசுவதாகவே இல்லை. எடிசன் பற்றிப் பேசினேன்.. கிரஹாம் பெல் பற்றி.. ஹென்ரி ஃபோர்ட் பற்றி.. மேரி க்யூரி பற்றி… ஆனாலும் அப்துல் கலாமைப் பற்றி மாணவர்கள் மத்தியில் இருந்த எண்ணம் என்னைப் பேசவைத்தது. பறத்தல் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டது எப்படி என்ற கதையை நான் விவரித்துச் சொன்னபோது மாணவர்கள் மத்தியில் தெரிந்த வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் நிற்கின்றன.

சீனிவாசா மேல்நிலைப் பள்ளி மாணவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். கற்றுக்கொள்வதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது. கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் பட்டென்று வந்து விழுகின்றன. சந்தேகத்தைத் தயங்காமல் கேட்கிறார்கள். முக்கியமாக, அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறையைச் சொல்லவேண்டும். சிரிக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் ஐந்து நொடிகளைத் தாண்டுவதில்லை. கைத்தட்டலுக்கும் அதே ஐந்து நொடிகள்.. சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

பள்ளியின் செயலர் இரா. இராஜசேகரன். நல்ல மனிதர். நிறைய புத்தகங்களை வாசிக்கக்கூடியவர் என்று கேள்விப்பட்டேன். பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய சுதந்தரம் கொடுத்திருக்கிறார். நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய அந்தச் சுதந்தரம் பயன்படுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் எழிலரசனுக்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. நிறைய கனவுகள் இருக்கின்றன.

முக்கியமாக, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் சுப்ரமணியனைப் பற்றிச் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட முப்பது வருடங்களைக் கடந்திருக்கிறது அவருடைய கல்விப்பணி. மனிதர் எத்தனை வேகமாக நடக்கிறார். எத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிறார். பண்பான வார்த்தைகள். பக்குவமான உபசரிப்பு. பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில மனிதர்களுடைய முகங்கள் நமக்குள் ஒட்டிக்கொண்டுவிடும். ஆசிரியர் சுப்ரமணியன் அந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்.

நான் பேசி முடித்தபோது மணி பன்னிரண்டு. அதன்பிறகு மாணவர்கள் படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில் பேசினார். சத்திய சோதனை. டிஸ்கவரி ஆஃப் இந்தியா. நேருவின் உலகச் சரித்திரம். பொன்னியின் செல்வன் என்று நிறைய புத்தகங்களைச் சொன்னார். படிப்பது எப்படி என்பதற்குக் கொஞ்சம் டிப்ஸ் வழங்கினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பத்ரிக்கான நேரம் தொடங்கியது. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்னென்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன? என்பது முதல் பிரிவு. படிக்கும்போதே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் என்பது இரண்டாவது பிரிவு.

அல்வா போன்ற அற்புதமான சப்ஜெக்ட். பத்ரி வெளுத்து வாங்கிவிட்டார். கார்ட்லெஸ் மைக் என்பதால் மனிதர் மேடையை விட்டு நகர்ந்து மாணவர்களை நோக்கிச் சென்று விட்டார். பேசும்போதே நிறைய கேள்விகள் கேட்பது பத்ரியின் பழக்கம். கேள்வி கேட்ட மறுநொடி பதில் சொல்லிப் பழகியிருக்கிறார்கள் சீனிவாசா மாணவ – மாணவிகள். பத்ரிக்கும் மாணவர்களுக்கும் சரியான போட்டி.

11, 12 வகுப்பு மாணவர்களுக்கு கம்யூட்டர் தொடர்பான பயிற்சிமுகாமை நடத்தினார் கே.எஸ். நாகராஜன். கைவசம் லேப் டாப், ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டுசென்றிருந்தோம். மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் செலுத்தினார்கள். மாணவர்களுக்குத் தனியே. மாணவிகளுக்குத் தனியே. இரண்டு பிரிவுகளாகத்தான் பயிற்சிமுகாமை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

பயிற்சி முகாம் முடிந்தபிறகு நாகராஜன் இரண்டு விஷயங்கள் சொன்னார். கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் ஆர்வம் செலுத்தினார்கள் என்பது முதல் விஷயம். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றே செய்திகள் கேட்டுப் பழகிய எனக்கு இந்தச் செய்தி ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிறகு இரண்டாவது விஷயத்தைச் சொன்னார். கம்ப்யூட்டர் பற்றி மாணவர்களைவிட மாணவிகளுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கின்றன!

Thursday, June 3, 2010

இந்திய விமானங்கள் : சிலபல குளறுபடிகள்!

நூற்றி ஐம்பத்தெட்டு உயிர்கள். தாங்கமுடியாத அதிர்ச்சியை மங்களூர் விமான விபத்து ஏற்படுத்தியுள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அதைக் காட்டிலும் கூடுதல் அதிர்ச்சியைத் தரக்கூடிய செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஆகிய துறைகளில் நிலவிக்கொண்டிருக்கும் குளறுபடிகள், குழப்பங்கள், கோளாறுகள், ஓட்டைகள் தொடர்பானவை.

இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளுள் சிவில் விமானப் போக்குவரத்து முக்கியமானது. வர்த்தக விஷயங்கள் தொடர்பாக விரைந்து சென்று காரியங்களை முடிக்க வேண்டும் என்று விரும்பும் அத்தனை பேரும் இன்று சலலமில்லாமல் தேர்வு செய்வது விமானப் பயணத்தைத்தான். பயணச் செலவைப் பற்றிக் கவலைப்பட இன்று யாரும் தயாராக இல்லை. விமானப் பயணத்தால் கிடைக்கக்கூடிய லாபம் அபரிமிதமாக இருக்குபோது பயணத் தொகை பற்றிக் கவலைப்படுவது புத்திசாலித்தனமல்ல. நேரத்துக்கு நேரம். லாபத்துக்கு லாபம்.

விளைவு, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. 2005ஆம் ஆண்டில் மூன்று கோடியே எழுபது லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்து ஏழு கோடியைத் தொட்டுவிட்டது. அதேபோல, விமானம் தரையிறங்குதல் மற்றும் மேலெழும்புதலின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது எண்பது சதவீதம் உயர்ந்திருக்கிறது.

நியாயமாகப் பெருமைப்படக்கூடிய வளர்ச்சிதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளத் தவறிவிட்டது இந்திய சிவில் விமானப் போக்குவரத்துறை. விமானிகள், ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்கள், பராமரிப்புப் பொறியாளர்கள், ரெகுலேட்டர்கள் என்று விமானத்தின் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரிடமும் பிரச்னைகள் இருக்கின்றன. விமானிகளிடம் இருந்து தொடங்கலாம். தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்